Saturday, February 6, 2016

ஊடகங்கள் பக்கசார்புடையவை என்றால் தி ஹிந்து விற்கு என்ன பெயர் ...?

பிப்ரவரி 4 அன்று தி தமிழ் ஹிந்து  நாளிதழில்  “ இந்துத்துவம் அடிப்படைவாதம் என்றால், வஹாபிஸத்துக்கு  என்ன பெயர் “ என்ற ஓர் விமர்சன கட்டுரை வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இக்கட்டுரைக்கு  பலர் நடுநிலையாக எதிர் விமர்சனங்களை முன்வைத்தாலும் நம்மில் சிலர் உச்சிமுகர்ந்து இக்கட்டுரையை வரவேற்கிறார்கள், இன்னும் இதுபோன்ற கட்டுரைகள் எழுதப்பட  வேண்டும் என்ற அளவிற்கு உற்சாகமடைந்துள்ளார்கள். இதற்க்கு காரணம் ஏற்கனவே  அவர்களுக்கு எதிரான கொள்கையாக  வாஹாபிஸம்  அடையாளபடுத்தபட்டுள்ளது, TNTJ போன்ற தர்கா வழிபாட்டை  எதிர்க்கும் அமைப்புகள்  அனைத்திற்குமான எதிர்வினையாக இக்கட்டுரையை அவர்கள் பார்கிறார்கள் ,வரவேற்கிறார்கள்.

சமஸ் மிக சமத்தாக வஹாபிசத்தை விமர்சிப்பதற்கான தலைப்பை எடுத்துகொண்டு வஹாபிசத்தின் பெயரில்  இஸ்லாத்தின்  ஓரிறை கொள்கைக்கு எதிரான வாதங்களை முன்வைத்து ,  இஸ்லாத்தின்  ஒற்றை கலாச்சாரத்தை அதன் தனித்துவத்தையும் அவர் விரும்பும் பன்முகதன்மையோடு ஒப்பிட்டு சகட்டு மேனிக்கு அர்த்தமற்ற விமர்சனங்களை முன்வைக்கிறார். சவூதிஅரசாங்கம் வழங்கும்  குற்றவியல் தண்டனைகளையும் மிச்சம் வைக்காமல் அவதூறை அள்ளிவீசி வஹாபிஸத்தை விமர்சிப்பதாக காட்டிக்கொண்டு இஸ்லாத்தின் குற்றவியல் சட்டங்களை  விமர்சிக்கிறார்.

முஸ்லிம் என்றால் பெயரளவிற்கு இருக்க வேண்டும் தூய்மைவாதம் பேசக்கூடாது , தூய இஸ்லாத்தை பின்பற்ற கூடாது  அப்படி பின்பற்றினால் அது முஸ்லிம்களை தீவிரவாதிகளாக , பயங்கரவாதியாக  மாற்றிவிடும், நாட்டில் மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மை கேள்விக்குறியாகிவிடும்  எனவே வஹாபிசத்தை ஒவ்வொருவரும் எதிர்த்து நிற்க வேண்டும் என்று இஸ்லாத்திற்கு  எதிராக  இஸ்லாமியர்களையே திருப்பும் திரிப்புவாதத்தை எடுத்துவைத்து தௌஹீத் எதிர்க்கபட வேண்டிய ஒன்று என்ற தனது முரண்பாடான கருத்தியலை முன்வைக்கிறார்.

“நான் ஒரு இந்து , முஸ்லிம் , கிறிஸ்துவன்,யூதனும் கூட”  இவ்வாறு காந்தி சொன்னது மதசார்பின்மைக்கு இலக்கணம் என்கிறார். இதன் மூலம் இவர் என்ன சொல்லவருகிறார், எல்லோரும் எல்லா கொள்கைகளையும்  உள்வாங்கிகொண்டு வாழவேண்டும் என்கிறாரா  ? காந்தி இவ்வாறு சொன்னது தத்துவமாக இருக்கலாம்  அது நடைமுறை சாத்தியமல்ல.. ஆனால்  “இந்த இந்திய தேசத்தின் முழுமையான சுதந்ததிரத்தை நாம் சுவைக்க வேண்டும் என்றால் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் நீதிமான் உமர் அவர்களின் ஆட்சியின் அடிப்படையில் இந்தியாவில் ஆட்சி அமைகிறபோது தான் அது சாத்தியம் என்றார் தேசதந்தை காந்தி”

சமஸ்  குறிப்பிட்ட அதே காந்திதான் இதையும் சொன்னார் இந்தியாவின் பன்மைத்துவத்திற்கு எதிராக இஸ்லாமிய ஒற்றைகலாச்சாரத்தை முன்மொழிந்த காந்தியையும் தி ஹிந்து இனி வஹாபியாகத்தான் பார்க்க போகிறதா ? ...  அதே காந்தியை   இஸ்மாயில் என்ற முஸ்லிம் அடையாளத்தில் சென்று சுட்டு கொலை செய்த கோட்சே கும்பலோடு வஹாபிஸத்தின் பெயரில் முஸ்லிம் அமைப்பை  ஒப்பிட்டு பொருத்தி பார்ப்பது பச்சை அயோக்கியத்தனமில்லையா சமஸ் !

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் இஸ்லாத்தில் தன்னை இணைத்துகொள்ளும் முன் அன்றைய அரபுலகமும், உமரின்  சக காலத்து மக்களும் இப்படிச் சொன்னார்கள். “கத்தாப் வளர்க்கும் கழுதை ஒருவேளை சரியாகிவிடும் ஆனால் கத்தாபின் மகன் ஒருபோதும் சரியாக மாட்டார்” இதற்க்கு ஒருபடி மேலாக , கத்தாப் தன்மகன் உமரைப் பார்த்து “நீ ஒட்டகம் மேய்க்க கூட லாய்க்கு இல்லை” என்பார். ஆனால் உலகமே கண்டு வியக்கும் மனிதராக, உலக அரசியல் அரங்கில் ஆட்சியாளர்களே வியந்து போற்றும் மனிதராக உமர்(ரலி) மாறியதற்கு நீங்கள் எதிர்க்கும் ஒற்றை கலாச்சார இஸ்லாம் பின்புலமா அல்லது சூபித்துவம் பின்புலமா ?

தனித்துவமான ஒற்றை கலாச்சாரத்தை கொண்ட தூய இஸ்லாத்தை உமர்(ரலி) அவர்கள் ஏற்று  பின்பற்றியதுதான் மாற்றத்திற்கான காரணம், காந்தி உமர்(ரலி) அவர்களின் ஆட்சியை முன்மாதிரியாக  காட்டியது ஏன் ?,   உமர் (ரலி) அவர்களின் ஆளுகையின் கீழ்உள்ள பகுதிகளில் சமநீதிநிலைநாட்டபட்டது, மக்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டது,   இஸ்லாத்தை ஏற்காத மக்கள் தங்கள் மத வழிபாடுகளை செய்துகொள்வதற்கு எந்த தடையும் செய்யாமல் முழு சுதந்திரம் அளிக்கபட்டிருந்தார்கள்.

ஏனெனில் இஸ்லாமிய கலாச்சாரம் தனித்துவம் மிக்கது அதேவேளை பன்மைத்தன்மை கொண்ட மக்களின் சுயவிருப்பத்திற்கு எதிராக ஒருகாலமும் செயல்பட்டது கிடையாது. ஏனெனில் இஸ்லாத்தில் எந்த நிர்பந்தமுமில்லை, அந்த வழியை பின்பற்றும் முஸ்லிம்களை பார்த்து நீங்கள் ஆட்சிக்கு வந்தால் சிவனையும் , பெருமாளையும் , முனியாண்டியையும் விட்டுவைப்பீர்களா?! என்று வஹாபிசத்தை முன்னிருத்தி திரிப்புவாதம் செய்து துவேஷத்தை தூண்டுவது ஊடக தர்மமா..?  

கடந்த டிசம்பர் தொடக்கம் சென்னை மழை வெள்ளம் , சென்னை மிதக்கிறது , தத்தளிக்கிறது என்று ஊடங்கங்கள் அனைத்தும் பரப்பரப்பாக செய்தி வெளியிட்டு கொண்டிருந்த நேரம், அரசியல் கட்சிகள் அனைத்தும்  ஆளும்கட்சி செயலிழந்துவிட்டது, அரசு நிர்வாகம் முடங்கிவிட்டது என்று அரசியல் செய்துகொண்டிருந்தநேரம் , இன்னும் பெரும் மழை இருக்கிறது சென்னை முற்றிலுமாக மூழ்கபோகிறது என்று வதந்திகள் வசதியாக வலம்வந்துகொண்டிருந்த நேரம்..

எந்தவித பிரதிபலனையும் பார்க்காமல் முதலில் ஓர் அமைப்பாக களத்தில் இறங்கி மீட்ப்பு பணியை முழுவீச்சில் முடுக்கிவிட்டது   தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத்  அடுத்து  சற்றும் தாமதிக்காமல்   TMMK,SDPI, INTJ , SIO, JIH, JAQH  என்று இஸ்லாமிய அமைப்புகள் அனைத்தும் களத்தில் இறங்கி மீட்புபணி, நிவாரண பணி, தூய்மை பணி என்று ஓர் அரசாங்கம் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து சென்னை மக்களின் துயர்துடைத்தார்களே அப்போது  சமஸ் போன்ற பன்மைதுவத்தில்  ஊறிப்போன சூபித்துவ ஞானிகள் எல்லாம் எங்கே போனார்கள் ?

மீட்புபணியில் களமிறங்கி பணியாற்றிய பெரும்பாலான இயக்கங்கள் தர்கா வழிபாட்டை ஏற்காதவர்கள் தான்.
நோய்தொற்று ஏற்படாமல் இருக்க கோவிலை சுத்தம் செய்தவர்களும்  உங்கள் பார்வையில் வஹாபிகள் தான். அன்று வஹாபிகள் எப்படி பன்மைதுவத்தோடு ஒன்றிபோனார்கள் ? வஹாபிஸத்தை எதிர்த்து நிற்பது தார்மீக கடமை என்று  தற்போது பரப்புரை செய்யும் தி ஹிந்து விற்கு அன்று களத்தில் பெரும்பான்மையாக நின்றது வஹாபிகள்  என்பது தெரியாதா ?

வஹாபிகளின் மனிதநேய பணி என்றோ , வஹாபிசத்தை கடந்த மனிதநேய பணி என்றல்லவா அன்று சமஸ் போன்றவர்கள் பரப்புரை செய்திருக்க வேண்டும் .

சரி அப்போது இவர்கள் முஸ்லிமாகதான் தெரிந்தார்கள் என்று வைத்துகொண்டாலும் , முஸ்லிம்களின் மனிதநேய பணி என்றோ , இஸ்லாமியர்களின் மனிதநேய பணி என்றோ நேரடியாக பரப்புரை செய்யாமல்  தி ஹிந்து போன்ற பக்கசார்பான நாளிதழ்கள், மதத்தை கடந்த மனிதநேயம் , மதத்தை வென்ற மனிதநேயம்  என்றெல்லாம் உச்சிகொட்டியதின்  உள்நோக்கம் எங்களுக்கு தெரியாதா !

மதத்தை கடந்த மனிதநேயம் என்பதற்கும் , முஸ்லிம்களின் மனிதநேயப்பணி , இஸ்லாமியர்களின் மனிதநேயப்பணி  என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

அதாவது  தன் மதத்திற்கு உட்பட்டு இந்த மனிதநேயம் வெளிப்படவில்லை, மதகோட்பாட்டை தாண்டி வெளிப்பட்டிருக்கிறது என்பது போலவும், அல்லது தன் மதத்தை பொருட்படுத்தாமல் , மனிதன் என்ற அடிப்படையில் உதவினார்கள் என்ற  கருத்தை தான் பக்கசார்பான ஊடகங்கள் பாராட்டு பத்திரம் என்ற பெயரில் விதைத்தார்கள்.

உண்மையில் இவர்களின் நோக்கம் என்ன வென்றால் , உலகத்தில் எந்த மூலையில் ஒரு முஸ்லிம் தவறு செய்தாலும்  அதை இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தி இஸ்லாத்தை விமர்சிக்க வேண்டும்.. அதுவே ஒரு முஸ்லிம் மனிதநேய பணியில் ஈடுபட்டால்  அதை எந்தவகையிலும் இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தாமல் தனிமைபடுத்தி பாராட்டுவதும், எந்த வகையிலும்  மற்ற சமூக மக்களுக்கு இஸ்லாத்தின் மேல்  கரிசனம் வந்துவிட கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

இஸ்லாத்தையும் , மனிதநேயத்தையும் எந்த ஒரு முஸ்லிமாலும்  வேறுபடுத்தி பார்க்க முடியாது , பிறர்நலம் நாடுவதில் இஸ்லாத்திற்கு நிகர் இஸ்லாம் மட்டுமே.. உலக மக்களுக்கான வாழ்வியல் நெறியை  நாங்கள் ஏற்றிருக்கும் போது, மனிதநேயத்தின் ஊற்றின் மீது நாங்கள் நிற்கும்போது , மதத்தை கடந்து அல்ல , எங்கள் மார்க்கத்திற்கு உட்பட்டு தான் நாங்கள் மனிதநேயத்தை வெளிப்படுத்துகிறோம்.

அடுத்து “இயற்கையின் அடிப்படை பன்மைத்துவம்” என்கிறார் சமஸ் . இஸ்லாம் இயற்க்கை மார்க்கம் ,இஸ்லாத்தின் அடிப்படை ஓரிறை கொள்கை இதில் எங்கே பன்மைத்துவ வாதம் வந்தது இதை கேட்டால் நான் வஹாபியா ?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓரிறை கொள்கையை சொன்னதற்காக கல்லால் அடிபட்டார்கள், சொந்தபந்தங்களால் அச்சுறுத்தபட்டார்கள் , தன் நாட்டைவிட்டே இடம்பெயர்ந்து வேறுநாட்டிற்க்கு செல்லும் நிலை ஏற்பட்டது.. சமஸ் வாதப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்றைய அரேபிய தேசத்தின் பன்மைத்துவத்திற்கு எதிராக ஓரிறை கோட்பாட்டை முன்வைத்தது தவறு என்பார இந்த சமஸ் ..!!  சொன்னாலும் சொல்வார்.

இஸ்லாத்தை நேரடியாக விமர்சித்தால் கண்டங்கள் வரும் என்பதால் , வஹாபிசம் எதிர்ப்பு என்ற பெயரில் ஒளிந்துகொண்டு இஸ்லாத்தை தவறாக சித்தரித்து , இஸ்லாத்தின் ஒற்றை கலாச்சாரத்தை , ஓரிறை கோட்பாட்டை தகர்க்கலாம் என்று திட்டமிடுகிறார்கள் சமஸ் போன்றவர்கள்.

இஸ்லாம் மதம்கிடையாது அது மார்க்கம்  வாழ்வியல் நெறி (way of life) இஸ்லாத்தில்  மனிதவாழ்வியலுக்கு தேவையான அனைத்திற்க்கும் வழிகாட்டல்கள் இருக்கிறது. இவை வெறும் தத்துவங்கள் அல்ல , முழுமையாக நடைமுறைபடுத்தபட்ட  நபி(ஸல்) அவர்களின் மூலமாக வாழ்ந்து காண்பிக்கபட்ட  வாழ்வியல் நெறி.. உலகில் எங்கே முஸ்லிம்கள் இஸ்லாத்தின் கோட்பாடுகளை பின்பற்றி வாழ்கிறார்களோ அங்கே தனிதன்மையோடு திகழ்வார்கள். இந்த தனித்தன்மையை முஸ்லிம்கள் இழக்க வேண்டும் என்பதே எதிரிகளின் இமாலய இலக்கு.

அடுத்து  தர்காக்கள் மேல் கை வைக்கிறார்கள் வஹாபிகள் என்ற அவதூறு :

தமிழகத்தில் இதுவரை எத்தனை தர்காக்கள் வஹாபிகளால் இடிக்கப்பட்டுள்ளது என்ற விபரத்தை  தி ஹிந்து நாளிதழ் தரமுடியுமா ?  தர்காக்கள் இஸ்லாத்திற்கு எதிரானது , இடிக்கப்பட வேண்டிய ஒன்று என்ற கருத்தில் தான் தர்காக்களை எதிர்க்கும் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். தி ஹிந்து நாளிதழ் வஹாபிகள் என்று நேரடியாக தாக்கும் TNTJவின் கருத்தும் இது தான்..  ஆனால் இந்த  TNTJ போன்ற அமைப்புகள் தங்கள் கருத்துக்களை பரப்புரை செய்கிறதே தவிர , அத்துமீறி எந்த தர்கா மேலும் கைவைத்ததில்லை.

மாறாக தர்காவை தகர்க்க வேண்டும் என்று சொல்லும் இதே  TNTJ தான் கடந்த ஆண்டு 2015 ஜனவரி 1ம் தேதி முத்துபேட்டையில் சமூக விரோதிகளால் தர்ஹா சுவர் இடிக்கப்பட்டபோது அதற்க்கு உடனே TNTJ நிர்வாகிகள் களத்திற்கு சென்று தர்கா சுவர் இடிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு சுவரை இடித்த கயவர்களை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீடியாவில் கடுமையான கண்டனங்களை  பதிவு செய்த வரலாறு இருக்கிறது.

ஆகையால் சமஸ் போன்றவர்களுக்கு நாங்கள் சொல்லிகொள்வது என்னவென்றால், இஸ்லாத்தை நீங்கள் விமர்சிக்ககூடாது என்று சொல்லவில்லை , இஸ்லாம் இதைவிட பன்மடங்கு விமர்சனங்களையும் , எதிர்ப்புகளையும்  கடந்துவந்த சத்திய மார்க்கம்  ஆனால் ஆதரங்களோடு  விமர்சியுங்கள் அவதூறு வேண்டாம் , விமர்சனங்களை நேரடியாக வையுங்கள்  ஏதாவது ஒரு அடையாளத்திற்குள் ஒளிந்துகொண்டு திரிப்புவாதம் செய்வது கோழைத்தனம்.

மேலும் வஹாபிஸம் என்றால் என்ன என்பதை முதலில் நீங்கள் தெளிவாக விளங்கி கொண்டு, இஸ்லாத்திற்கும் நீங்கள்  புரிந்துகொண்ட வஹாபிச கொள்கைக்கும் என்ன வேறுபாடு  என்பதை ஆதாரபூர்வமாக பொதுதளத்தில் முன்வைத்து விவாதிக்க முன்வர வேண்டும்.

தி ஹிந்து நடுநிலை நாளேடு என்ற ஓர் பிம்பம் உருவாக்கபட்டிருந்தது அதை தகர்த்து நாங்களும் பக்கசர்பான ஊடகம்தான் என்பதை எங்களுக்கு உணர்த்தியதற்கு சமஸிற்கு  நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்.

தொடர்புக்கு  :  nagore.anees@gmail.com.

Friday, May 22, 2015

SSLC பொது தேர்வில் தோல்வி அடைந்த வெற்றியாளர்களுக்கு....,




தேர்வில் தோற்றுபோனால் என்ன...?

தேர்வில் தோற்று போவதற்கும் , நம் வாழ்கையில் வெற்றி பெறுவதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை நீங்கள் விளங்கிகொள்ளுங்கள்...

வாழ்கையில் வெற்றிபெற்ற மனிதராக இன்று அறியப்படும் பலர் , தேர்வில் தோற்றவர்கள் மட்டுமல்ல, பள்ளிக்கூடம் பக்கம்கூட போகாதவர்கள் என்பதை உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்..

உங்களுக்கு வைக்கப்படும் தேர்வுகள் ..
உங்கள் மொத்த அறிவை அளந்து பார்க்கும் அளவுகோள் அல்ல ...
அது உங்கள் நியாபக சக்தியை சோதித்து பார்க்கும் ஓர் ஆய்வறிக்கை மட்டுமே ...அந்த ஆய்வுகள் கூட மாறிகொண்டே தான் இருக்கும். எனவே
நீங்கள் தேர்வின் முடிவை வைத்து உங்களை மதிப்பிடாதீர்கள்... உங்கள் தனிதன்மையான திறமைகளை வைத்து மதிப்பிடுங்கள்..

உங்களை யாரோடும் ஒப்பிடாதீர்கள் ... ஒப்பிட அனுமதிக்காதீர்கள் ... அது தான் உங்கள் பலத்தை பலவீனப்படுத்தும்..

எதையும் நினைத்து கலங்காமல் அடுத்த தேர்வுக்கு தயாராகுங்கள் ...
வெற்றி பெற முடியுமா என்று யோசிக்காதீர்கள் , வெற்றியை முடிவு செய்துகொள்ளுங்கள் .

என்றும் நினைவில் வைத்துகொள்ளுங்கள்...
வெற்றி நிரந்தரமல்ல...,
தோல்வி முடிவல்ல......